‘சாதிய காரணங்களுக்காக கொலை நடக்கவில்லை’ – ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி ..!
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து சென்னை காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை 7 மணி அளவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள காவல்நிலையத்தில் 8 பேர் நேற்று இரவு சரணடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியபோது, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும்.
இதற்கிடையே 3 முறை உளவுத்துறை எச்சரிக்கை வந்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லாமல் இருக்கிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக புலனாய்வு அமைப்புகளிடமிருந்து எந்த ஒரு உளவுத் தகவலும் வரவில்லை. மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அதன் பின் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி 3 மணி நேரத்திற்குள் 8 குற்றவாளிகளை கைது செய்தனர். விசாரணையில் மேற்படி அவர்கள் தான் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
இந்த சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல் கனி ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை மற்றும் தற்போது கிடைத்த தகவலின்படி ஆம்ஸ்ட்ராங் சாதிய காரணங்களுக்காகவும் கொலை செய்யப்படவில்லை.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக எந்த ஒரு அச்சுறுத்தலும் இருந்தது போல் எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இல்லை. இதனால் முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்”, என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறி இருந்தார்.