முரசொலி நிலம்: பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை கோடம்பாக்கத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள 1825 சதுர அடி கொண்ட முரசொலி அலுவலகம் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம். அந்த பஞ்சமி நிலத்தில் தான் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளது என கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு கடந்த 2019 நவம்பர் மாதம் தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் விசாரணை நடத்த தடை விதிக்கவும் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது” பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது பட்டியலின ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் , ஆனால் உரிமையியல் வழக்கில் நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வு காண முடியும் என முரசொலி அறக்கட்டளை தரப்பில் தெரிவித்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “முரசொலி அலுவலக நிலத்துக்கு உள்ள பட்டா, விற்பனை பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளரை முடிவு செய்வதற்காக இறுதி ஆதாரம் இல்லை.
கோடநாடு வழக்கு: விசாரணைக்காக நாளை ஆஜராகும் சயான்..!
எனவே ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக கூறினார். இந்நிலையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த புகாரில், தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் விசாரணை நடத்தலாம் எனவும் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய பழைய நோட்டீசை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது எனவும் புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தை பெற்று விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.