முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!
முகுந்தன் விவகாரம் எங்கள் உட்கட்சி பிரச்சனை அது குறித்து வேறு யாரும் பேச வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பிற்கு தனது மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமித்து அறிவித்தார். பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுத்ததை மேடையிலேயே எதிர்த்தார் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கட்சியில் இருந்து விலகுங்கள்…
முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பா? கட்சியில் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என மேடையிலேயே எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் கோபமான ராமதாஸ், நான் தான் கட்சியை உருவாக்கினேன். என் முடிவுக்கு கட்டுப்படாதவர்கள் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம் என அறிவித்தார். இதனால், அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பனையூர் வாருங்கள்…
இதனை அடுத்து, ஜி.கே.மணியிடம் மைக்கை வாங்கிய அன்புமணி, நான் புதியதாக பனையூரில் கட்சி அலுவலகம் ஆரம்பித்துள்ளேன். என்னை பார்க்க விரும்புவர்கள் அங்கே வந்து சந்திக்கலாம் என்று கூறிவிட்டு உடனடியாக மேடையை விட்டு இறங்கி சென்றார். இதனால் நேற்று பாமக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
சமாதானம் :
இதனை அடுத்து, இன்று பாமக மூத்த நிர்வாகிகள், ஒன்றிணைந்து, ராமதாஸ் – அன்புமணி இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தனர். இதற்காக விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் வந்தார். அங்கு பாமக மூத்த நிர்வாகிகள் ஜி.கே.மணி, சிவகுமார், வழக்கறிஞர் பாலு என பலர் இருந்தனர்.
அன்புமணி செய்தியாளர் சந்திப்பு :
சுமார் அரை மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ” கட்சி வளர்ச்சி பற்றி சட்டமன்ற தேர்தல் பற்றியும் , சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும், சாதிவாரி கணக்கெடுப்பு , விவசாய போராட்டங்களை அடுத்து முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் பற்றியும் இன்று ஒரு குழுவாக விவாதித்தோம். வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கிய ஆண்டு. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். என இக்கூட்டத்தில் ஆலோசித்தோம்.” என்று கூறினார்.
எங்கள் உட்கட்சி பிரச்சனை :
அதன் பிறகு நேற்று பொதுக்குழு கூட்டத்தில் நடந்த காரசார விவாதம் பற்றி பேசுகையில், “பாமக ஒரு ஜனநாயக கட்சி. இதில் காரசாரமான விவாதம் நடப்பது வழக்கம் தான். இளைஞரணி விவகாரம் என்பது எங்கள் உட்கட்சி பிரச்சனை. அதில் வேறு யாரும் பேச வேண்டாம். “என கட்டமாக பதில் அளித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.