“இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தேர்விற்கு இந்தி மொழியில் மட்டும் பயிற்சி வகுப்புகளா ?” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்..!!

Default Image

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்விற்கு இந்தியில் மட்டும் நடத்துவது கண்டனத்திற்குரியதாக எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது:

“பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஆகஸ்டு 24, 2021 அன்று வெளியிட்டது.

இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பித்துள்ள ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்களுக்கு தேர்வுக்கு முன்பாக பயிற்சி தரப்படும். முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தரத் துவங்கினர். அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. இது விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவதாக இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள்.

ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும் வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேராவண்ணம் உறுதி செய்திட வேண்டும்”, என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்