‘எப்படி இருக்க?’ .. செந்தில் பாலாஜியை கண்கலங்கி நலம் விசாரித்த எம்.பி ஜோதிமணி!
471 நாட்கள் சிறைவாசகத்திற்கு பிறகு வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக அமைச்சார்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அவருக்கு புழல் சிறை வாசலிலேயே திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
மேலும், வெளியில் வந்தவுடன் நேராக சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறைவாசம் சென்று வந்த செந்தில் பாலாஜியை திமுக நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதில், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சாத்தூர் ராமசந்திரன் போன்ற முக்கிய நிர்வாகிகளும் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது, கரூர் எம்.பி.ஜோதிமணியும் செந்தில் பாலாஜியை சந்தித்தார்.
நேரில் சந்தித்த அவர் சிறுது வினாடிகள் பேசமுடியாமல், பின் ‘எப்படி இருக்க?’ என கேட்டு நலம் விசாரித்தார். அதன் பிறகு, செந்தில் பாலாஜியின் கையை கோர்த்து கண்கலங்கி ஆறுதல் தெரிவித்தார். பின், ஜோதிமணி தனது கையில் இருந்த கோவில் பிரசாதத்தை செந்தில் பாலாஜியின் கையில் கொடுத்து பேசினார்.
இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு இன்று காலை செந்தில் பாலாஜி தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அமலாக்க துறை அலுவலகத்திற்கு ஆவணங்களில் கையெழுத்திட சென்றார். சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, நிபந்தனை அடிப்படையில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.