‘அம்மா வளாகம்’ பெயர் மாற்றப்படவில்லை“ – அமைச்சர் தங்கம் தென்னரசு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்.
மறைந்த திமுக மூத்த தலைவரும், அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டியதாக கூறப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அம்மா வளாகம் பெயர் மாற்றப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டடத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டியதை எதிர்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்லேயே பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. திராவிட இயக்கத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் க.அன்பழகன். ஓபிஎஸ், ஈபிஎஸ் மனதில் திராவிட இயக்க சிந்தனைகள் அறவே நீர்த்துப்போய் விட்டன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
அம்மா வளாகம் பெயர் மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்த அமைச்சர், ராணிமேரி கல்லூரி வளாகத்தின் கட்டிடத்தின் கலைஞர் மளிகை என்ற பெயர் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. அண்ணா நூலகத்தையும், புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது அதிமுக அரசு. அதேபோல் அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை என தெரிவித்தார்.
வளாகத்திற்கு ஒரு பெயரும், வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தனித்தனி பெயரும் வைப்பது வாடிக்கையானது தான் என்று, க.அன்பழகன் மாளிகை என பெயர் சூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸுக்கு கண்டனம் தெரிவித்தார்.