பெரும்பாலானோர் நீட்டுக்கு எதிர்ப்பு – ஆய்வறிக்கை சமர்பித்தபின் நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி!!
எங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது என நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம், ஏ.கே.ராஜன் தலைமையில் குழு இன்று சமர்ப்பித்தது.
இந்த நிலையில், நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்து முதல்வரிடம் 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.
எங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன்வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 80 ஆயிரத்திற்கு அதிகமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ளவேண்டும். உளவியல், பொருளாதாரம், சமூகநீதி, சட்டபிரச்சனை என நிறைய உள்ளன. அனைத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். நீட் என்பது தேர்வு மட்டும் இல்லை தமிழர்களின் உரிமை,வாழ்வாதாரம் தொடர்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே, நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.