சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை – உயர்நீதிமன்றம்
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள், நடைபாதை பணிகள், அரசு அலுவலக கட்டிடங்கள் ஆகியவை தரமானதாக இல்லை என கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசு சார்பில் போடப்படும் சாலைகள் 6 மாதங்களில் பழுதடைந்து விடுவதாகவும், இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வதில்லை என்றும் நீதிபதியிடம் புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், சாலைகள் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக உள்ள விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படை கல்வியை முழுமையாக வழங்கப்படவில்லை, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.