மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு.. ரூ.154 கோடியில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் – அமைச்சர் அறிவிப்பு
தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
ஊரக பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் உயர்த்தப்படுகிறது என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதில் நேரம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புளை வெளியிட்டு வருகின்றனர்.
மதிப்பூதியம் உயர்வு:
அந்தவகையில், தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். ஊரக பகுதிகளில் ரத்த சோகையை குறைக்கும் பொருட்டு 27 லட்சம் முருங்கை கன்றுகள் வழங்கப்படும். 10.50 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.137 கோடியில் 27 லட்சம் முருங்கை கன்றுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
புதிய சத்துணவு கூடங்கள்:
இதுபோன்று, ரூ.154 கோடியில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் அமைக்கப்படும் என்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தும் வகையில் புதிய சத்துணவு கூடங்கள் அமைக்கப்படும். மலை பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த ரூ.30 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
குடிநீர் இணைப்பு:
மேலும், ஊரக பகுதிகளில் ரூ.1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். விளிம்பு நிலை மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த ரூ.1,500 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.