தீவிரமடையும் பருவமழை: அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது உத்தரவு.!
பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
இதன் மூலம், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15, 16 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் உடைந்து விழுதல், போக்குவரத்து தடை போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.