பண மோசடி வழக்கு : அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு!
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவர் நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன் பின் திமுகவில் இணைந்த இவர், திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி 1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவர் புகார்தாரர்களின் வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக, அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.