“பணக் கொழுப்பு”..விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் சொன்ன பதில்!
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாடு மக்களை பற்றி என்ன தெரியும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. குறிப்பாக, கட்சியில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு த.வெ.க-வில் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பின்னனியில் விஜய் சமீபத்தில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருந்தார்.
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூன்று மணிநேரம் நடந்ததாகவும், த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாகவும் கூட தகவல்கள் வெளிவந்தது. இந்த சூழலில் இவர்களுடைய சந்திப்பு பற்றி அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்களும் பதில் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். இது குறித்து பேசிய சீமான் ” இருவரும் சந்தித்தார்கள் என்பதை நான் செய்தி வாயிலாக பார்த்து தான் தெரிந்துகொண்டேன். தேர்தல் வியூக வகுப்பாளர்களை நாடுவது என்பது சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் ஒரு நோய். எனக்கு இந்த மாதிரி வியூகதில் ஆர்வம் இல்லை விருப்பமும் இல்லை. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்?
கத்தரிக்காய் என்று தாளில் எழுதி ஒரு பயனுமில்லை. நிலத்தில் இறங்கி விதைபோட்டி செடியாக்கி தண்ணீர் விளையவிக்க வேண்டும். அதைப்போல தான், மேசையில் அமர்ந்துகொண்டு எழுதினால் என்ன பயன்? நிச்சியமாக அதில் எந்த பயனில்லை. தேர்தல் வியூக அமைப்பு என்பது தேவை இல்லாதது.
தன் நாட்டின் நிலம், வளம், மக்களின் பிரச்சனை எதுவும் தெரியாத நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் ? எனக்கு அறிவு இருக்கிறது ஆனால், பணம் இல்லை. பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்” எனவும் சீமான் விஜயை விமர்சனம் செய்து பேசினார். ஏற்கனவே, விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தியபோது சீமான் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து பேசி வந்தார். இந்த சூழலில், தற்போது விஜய்- பிரசாந்த் கிஷோர் குறித்து விஜயை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.