ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவி!வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகாரம் மற்றும் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.
பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘சீல்’ இல்லை. கேட்டால் ‘அரக்கு’ கீழே விழுந்துவிட்டதாக கூறினர் .தேனி மக்களவை தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவியுள்ளார். தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும்.மோடிக்கு தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்னார் மீது இல்லாத காதல், ஓ.பி.எஸ் மகன் மீது இருக்கிறது. அது ஏன் என தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சேராததால் மோடிக்கு சாதகம் .மேலும் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.