ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார் – கே.எஸ்.அழகிரி
மோடிக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று பா.ஜ.க. சொல்கிறது என கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 91-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேக் வெட்டினார்.
காங்கிரசில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
மேலும், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.ராஜகோபால் IAS, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் மா.வே.மலையராஜா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கே.எஸ்.அழகிரி தலைமையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார்
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, ராகுல்காந்தி இங்கிலாந்தில் உள்ள கல்லூரியில் ஜனநாயகத்தை குறித்து தான் பேசினார். மோடிக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று பா.ஜ.க. சொல்கிறது. ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார். ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ.க நெரிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பது நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த விவகாரத்தில், அரசுக்கு மட்டும் இல்லை பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.