தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் – திருமாவளவன் எம்.பி

Default Image

பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது.

இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மோடி அரசு 2017-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கி இருக்கிறது என்ற உண்மையை இன்று நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. 2017 இல் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த உளவுச் செயலி வாங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான தொகை தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் செயல்படும் ‘தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்’ ( NSCS) என்ற அமைப்பின் மூலமாக வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இந்த அமைப்புக்கு திடீரென 10 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை அப்போதே தி இந்து ஆங்கில நாளேடு வெளிப்படுத்தியிருந்தது. 2016ஆம் ஆண்டு அந்த அமைப்புக்கு 33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

2015 -ஆம் ஆண்டு அந்த அமைப்பு செலவிட்ட தொகை ரூ.25 கோடி மட்டுமே, ஆனால் 2017-ஆம் ஆண்டில் அதற்கு 333 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் 10 போன்களை உளவு பார்ப்பதற்கான பெகாசஸ் உளவுச் செயலிக்கு 7 லட்சம் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்துள்ளது, (அதாவது 5கோடியே 25 லட்சம் ரூபாய் ) மோடி அரசு சுமார் 300 கோடி ரூபாய்க்கு இந்த உளவுச் செயலிகளை வாங்கியிருக்கிறது.

அதன்மூலம் சுமார் 600 போன்களை உளவு பார்த்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. மோடி அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.300 கோடி தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என்ற அமைப்பின் மூலமாக இஸ்ரேலுக்கு அனுப்பி இருப்பது நிரூபணமாகியுள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் இனிமேலும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாத அளவுக்குக் கையும் களவுமாக மோடி அரசு பிடிபட்டு விட்டது. இந்தத் தேசத் துரோக செயல் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரும் உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞரும் பொய்யான தகவல்களை கூறியுள்ளனர். இதற்கெல்லாம் பிரதமர் மோடியே பொறுப்பு ஏற்க வேண்டும்.

அந்நிய நாட்டு உளவுச் செயலியை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது மட்டுமின்றி அதை மூடிமறைத்து நாடாளுமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றியது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேச துரோகமும் ஆகும். இந்தக் குற்றத்தைச் செய்த ஒருவர் பிரதமர் பதவியில் நீடிப்பது இந்த நாட்டுக்கே அவமானம் ஆகும். எனவே நரேந்திர மோடி அவர்கள் உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றிப் பல மாதங்கள் ஆன பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், பெகாசஸ் மூலம் மோடி அரசு செய்துள்ள தேசத் துரோகத்தைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் ஜனவரி 31 அன்று நிகழ்த்தப்பட உள்ள குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்