மோடி தவப்புருஷர் போல பேசிவிட்டுப் போய்விட்டார்.. மு.க ஸ்டாலின்..!
இந்திய நாட்டின் வேளாண்மையை காக்க வந்த தவப்புருஷர் போல பேசிவிட்டுப் போய்விட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று கோவையில் பேசியபோது பிரதமர் மோடி திமுக ஆட்சியில் அராஜகம் கட்டு அவிழ்த்து விடபட்டு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து விழுப்புரத்தில் உள்ள தீவானுரில் மு.க ஸ்டாலின் பேசிய போது திமுகவை குற்றம் சாட்ட பிரதமர் மோடிக்கு உரிமை கிடையாது.
தான் பிரதமர் என்பதை மறந்து, தரமற்ற முறையில் திமுக பற்றி மோடி விமரிசித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு திமுக மீது குற்றம் சாட்டி பேசினார் என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை நாடு இன்னும் மறக்கவில்லையே.
குஜராத்தை விட்டு விட்டு மோடி டெல்லிக்கு வந்துவிட்டால் மறந்து விடுவார்களா..? அந்தப் பாவம் தொடைக்கப்பட்டுவிடுமா..? திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் சிதைக்கப்பட்டுவிட்டன என்பது அவருக்கே தெரியும். மோடி பேசுவது பச்சை பொய் என்பது கோவை, திருப்பூர் சார்ந்த சிறு, குறு தொழில் அதிபர்களுக்கு தெரியும்.
டெல்லியில் கொட்டும் பணியில் கிடந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டாதவர் மோடி; ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வந்துள்ளார் மோடி. இந்திய நாட்டின் வேளாண்மையை காக்க வந்த தவப்புருஷர் போல பேசிவிட்டுப் போய்விட்டார்.
மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளை துன்பத்தில் தள்ளிய மோடிக்கு திமுகவை குற்றஞ்சாட்ட துளியளவு கூட உரிமையில்லை. இதுவரை பல விவசாயிகள் இறந்துள்ளனர், அவர்கள் மரணத்திற்கு யார் காரணம்..? சமீப காலமாக தமிழகத்திலும், புதுவையிலும் பாஜகவில் சேர்ந்து கொண்டு இருப்பவர்கள் பின்னணி என்ன..? எனவும் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அப்பாவி அதிமுக தொண்டர்களின் வாக்குகளை திருடி போக வந்துள்ள மோடிக்கு திமுகவைப் பற்றி பேச உரிமை இல்லை என தெரிவித்தார்.