மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது- கே.எஸ்.அழகிரி
மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.ஆனால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது
புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஎஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,8 வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு, சட்டம் ஆகும் முன்பே, மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் சட்டமாக மாறப் போகிறது என்பதற்கு, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு அளித்த பதிலே சாட்சி. மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். சூழலியல் வரைவு அறிக்கை – 2020 சட்டமாக நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.