வெளுத்து வாங்க போகும் கனமழை… இன்றைய வானிலை நிலவரம் என்ன.?
தமிழகத்தில் ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடஙக்ளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மிதிலி புயல் உருவாகி ஒடிசா நோக்கி நகர்ந்து விட்டது.
நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டது. அதில், குமரிக்கடல் பகுதியில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை (நவம்பர் 22) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் இதன் காரணமாக நிர்வாக வசதிக்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.
சென்னை வானிலை மைய தகவலின் படி இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரையில் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரப்படி தமிழத்தில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்,
நாளை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு சென்னையில் அண்ணா நகர், கிண்டி, காமராஜர் சாலை, மயிலாப்பூர் என பல்வேறு இடங்களில் மழைபெய்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் மேகமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.