மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலை..! ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!
தமிழகத்தில் மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது ரூ.1600 கோடி முதலீட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரி டாக்டர் சைய் சியாங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட இருப்பதால், அங்கு இருக்கும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான ஒரு முயற்சியாக உள்ளது.