ஃப்ளூ காய்ச்சல் பரவல் : பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா.? அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தகவல்.!
ப்ளூ காய்ச்சலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த காய்ச்சல் அதிகரித்து வருவதால், பள்ளிக்குழந்தைகளுக்கு புதுசேரி அரசு போல, தமிழக அரசும் விடுமுறை அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த விஷயத்தை தெளிவுபடுத்தினார்.
அதில், ‘ விடுமுறை தற்போது தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 நாளுக்கு மேலாக காய்ச்சல் அதிகம் இருக்கும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். தற்போதைக்கு பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை தேவையில்லை.’ என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ‘ வீடு தேடி வரும் கல்வி திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அத்திட்டம் அடுத்து மேம்படுத்தப்படும். ‘எண்ணும் எழுத்தும்’ எனும் தமிழ், ஆங்கிலம் எப்படி படிக்க வேண்டும் என 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.