“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க சாவடியிலும் சுங்க கட்டணமானது உயர்த்தப்பட்டது. வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரையில் உயர்த்தப்பட்டது.
சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 16) போராட்டம் நடைபெறும் என் முன்னதாக அறிவிக்கப்ட்டது. அதன்படி, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க கட்சித்தலைவர் ஜவார்ஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் ம.ம.க எம்.எல்.ஏ அப்துல் சமது தலைமையில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 400க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேபோல, கோவை கனியூர் பகுதியில், மதுரை கப்பலூர் சுங்க சாவடி உள்ளிட்ட பல்வேறு சுங்க சாவடியில் “சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” என்ற கோஷத்தை முன்வைத்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.