MKStalin: வடகிழக்கு பருவமழை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில், இதுதொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி – நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய 9 துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை குறித்து முந்தைய ஆண்டுகளின் அனுபவங்களை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள், அடைப்புகளை அகற்றும் பணிகள், நீர்நிலைகள் கால்வாய்கள், தடுப்பணைகளின் கதவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.