MKStalin Letter: இது உதவித் தொகை அல்ல. உரிமைத் தொகை.! மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முதல்வர் கடிதம்.!

Tamilnadu CM MK Stalin

முதலமைச்சரும் மாநில திட்டக்குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள், தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான மகளிருக்கான இலவச நகர பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகியவற்றின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்தும் விளக்கப்பட்டன.

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், “அரசு சார்பாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் எந்த வகையில் மக்களுக்கு பயனளித்து வருகிறது என்பதை பார்க்க ஆய்வறிக்கை உதவியாக இருக்கிறது. மகளிர் உரிமை தொகை மூலம் ரூ.1000 கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்கள் மூலம் வரக்கூடிய செய்திகள் மூலம் அறிகிறோம். அனைத்து ஊடகங்களும் பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்” என்று கூறினார்.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 1.6 கோடி பயனாளிக்கும் தனித்தனியே முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தங்களது அன்புக் கட்டளையால் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு எழுதும் கடிதம் என்று எழுதியுள்ளார்.

மேலும், “மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருவது திராவிட ‘மாடல்’ அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன. இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். இது பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரம்.”

“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல. உரிமைத் தொகை உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்