7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன ? மு.க.ஸ்டாலின் விளக்கம்
பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனே விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம் என ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ் பவனில் சந்தித்தார்.கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் சந்தித்தனர். அப்பொழுது ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தை, ஆளுநரிடம் வழங்கினார் ஸ்டாலின்.
ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆளுனர் உடனான சந்திப்பில் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக கோரிக்கை வைக்கப்பட்டது.மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக பரிசீலித்து முடிவு செய்வதாக ஆளுநர் கூறினார்.7 பேர் விடுதலை காலதாமதத்திற்கு ஆளுநர் சட்ட விளக்கங்களை தந்தார்.தமிழக ஆளுநரிடம் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம்.அதை வெளியில் சொல்ல முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.