ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும். இந்தியா கூட்டணி சார்பாக யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த வருடம் ஜனவரியில் உயிரிழந்தார். அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரும் இம்மாதம் 14ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் அத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படுமா அல்லது திமுக கூட்டணிக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு இன்று கோவையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ” ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்.” என தெரிவித்தார். அப்போது அப்படி என்றால் இந்த முறையும் காங்கிரஸ் தான் போட்டியிடுமா என கேட்கப்பட்டதற்கு, ” ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி வெல்லும், இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது, காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.” என தெரிவித்தார்.