#BIG BREAKING: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என கூறி முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின்..!..!
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர். இதுதவிர கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க ஸ்டாலின் 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க ஸ்டாலின் கொடுத்து ஆட்சி அமைக்க கூறினார்.
பின்னர், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கிடையில், புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்து பட்டியலை மு.க ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைத்தார்.
அந்த பட்டியலை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாளிகை நேற்று மாலை பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தம் ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மு.க ஸ்டாலின் உட்பட 19 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள், 15 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் சென்னை 3, கடலூர், திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
மொத்தமாக 29 மாவட்டங்களை சார்ந்த பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாலின் அமைச்சரவையில் இரண்டு பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
அவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம், கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வைகோ, முத்தரசன், சரத்குமார், கமல்ஹாசன், திமுக எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.