“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஐயா நல்லுகண்ணுவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து வாங்க வந்துள்ளேன் என நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” ஐயா நல்லகண்ணு அவர்களின் நூற்றான்டு விழா இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திமுக சார்பில் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி, பழ.நெடுமாறன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 29ஆம் தேதி காலை முதல் மாலை வரை இந்த நிகழ்வு நடைபெறும். தற்போது நாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வாழ்த்த வந்துள்ளோம். அனைத்து கட்சித் தலைவர்களும் ஒவ்வொரு ஆண்டும் நல்லகண்ணு ஐயா பிறந்தநாளுக்காக கூடுகிறோம். அந்த அடிப்படையில் நாம் இப்பொது கூடியிருக்கிறோம்.
முத்தரசன் அவர்கள் கூறியது போல, இன்று பொதுவுடைமை கட்சிக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணு ஐயாவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் அமையாது. நான் இன்று அவரை வாழ்த்த இங்கு வரவில்லை. வாழ்த்து வாங்க வந்துள்ளேன். எல்லாருக்கும் எல்லாம் எனும் கொள்கையை முன்னிறுத்தி நாம் ஆட்சி செய்து வருகிறோம்.
ஐயா நல்லகண்ணு அமைதியாக ஆழமாக சிந்தித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார். தொடர்ந்து நீங்கள் இருந்து எங்களை போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மதசார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேலாக வெல்லும் என முன்பு நான் கூறியிருந்தேன். இன்றைக்கு உள்ள நிலைமையில் 200 தொகுதிகளுக்கும் மேலாக நாம் வெல்வோம். 7 ஆண்டுகாலமாக இந்த கூட்டணி தொடர்கிறது. இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல. இது நிரந்தர கூட்டணி. இதற்கு நாம் அனைவரும் ஒன்றாக துணை நிற்க வேண்டும். ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில், நூற்றாண்டு காணும் தோழர் நல்லகண்ணு ஐயாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார்.