பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறும் “வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.
மாநாட்டில் பேசிய முதல்வர், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கு இலக்கணமாக சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க இங்கு கூடியுள்ளனர்.
திருமாவளவன் அவர்கள் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றிய போதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அப்போதே மேடையில் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும்.
ஜனநாயகம் காக்க இன்று இந்த கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். திருமாவளவன் என்றைக்கும் எங்களுக்குள் இருப்பவர்.. தமிழினத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து இருக்கிறோம். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவோ அல்லது அரசியல் உறவோ அல்ல..! கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் பிரிக்க முடியுமா? அப்படி தான் திமுகவும், விசிகவும்.
விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பாஜக ஆட்சியை அகற்ற வேண்டியது முக்கியம். தமிழ்நாட்டில் அக்கட்சி பூஜ்யம்.. அதே நேரம் அகில இந்திய அளவில் அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது, ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது.. இதை அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே ஒற்றை லட்சியமாக இருக்க வேண்டும்” என பேசினார்.