பாஜக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கு! முதல்வர் அறிவிப்பு
M.K.Stalin: மோடி வடிக்கும் கண்ணீரை அவர் கண்களே நம்பாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நாங்குநேரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் நாங்குனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அவர் பேசும் போது, “நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதி செய்யப் போகிறது. தமிழ்நாட்டை மதிக்கிற, தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் அது உங்க கையில் தான் இருக்கிறது. அதற்கு பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும், தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு திமுக, காங்கிரஸ் காரணம் என மோடி சொல்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது நீங்கள் தான்.
பிரதமர் மோடி வடிக்கும் கண்ணீரை அவர் கண்களே நம்பாது, பூதக் கண்ணாடி வைத்து தேடினாலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை, அதனால் தான் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக பிரச்சாரம் சென்று கையில் செங்கலை காட்டி வருகிறார். பாஜகவுக்கு எதிரான வாக்குகளை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்பதற்காக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தான் எடப்பாடி பழனிச்சாமியால் களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள்” என்று பேசினார்.