“கை நீட்டி பேசாதீங்க., அது மரபல்ல..” அதிமுகவினரை கடிந்து கொண்ட முதலமைச்சர்!
கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர மறுத்ததன் காரணமாக அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் அவர்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அவைக்கும், அவை வாயிலாக மக்களுக்கும் நான் சில விஷயங்களை சொல்லி கொள்கிறேன். தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இன்றி உள்ளது. மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் பெரிய அளவில் முதலீடு , கல்வி , வேலைவாய்ப்பு என தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நேர்மை சூழலை தாங்கிக் கொள்ள முடியாத தமிழ் மக்கள் விரோத சக்திகள் வீண் வதந்திகளை பரப்புகின்றனர்.
ஆங்காங்கே நடைபெறும் கொலைகளை ஊதி பெரிதாக்கி மக்களை பீதியில் வைக்கிறார்கள். மக்களை பாதுகாக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். சில ஊடகங்களும் பத்திரிகைகளும் இதற்கு துணை போவது இன்னும் வேதனை அளிக்கிறது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள் போல இந்த ஆட்சியில் கலவரங்கள் இல்லை. குற்றங்கள் குறைந்து வருகிறது. வழக்குகள் போடப்பட்டு அவர் ஆளும் கட்சியாக இருந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாத்து வருகிறோம்.
தொடர் குற்ற சம்பவங்களை கூறி மக்களை திசை திருப்ப வீண் புரளியை அளிக்காமல் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள். இந்த குற்றவழக்குகள் தரவுகள் அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது. சட்ட ஒழுங்கு பற்றிய தவறான செய்திகளை பரப்பாதீர்கள். அதற்கு துணை போகாதீர்கள்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.
அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அப்போது ஆவேசமாக அதிமுகவினர் பேசியதை அடுத்து, ” கேள்விகளுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். சபாநாயகரிடம் உரிய அனுமதி பெற்று, உங்கள் கேள்விகளை கேளுங்கள், அதுதான் மரபு. கை நீட்டி, கூச்சல் போடுவது மரபல்ல. எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன். டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்டேன் என கூறுபவன் நான் அல்ல. ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதனை அடுத்து தொடர் அமளியில் அதிமுக உறுப்பினர்கள் ஈடுபட்ட காரணத்தால் அதிமுகவினரை வெளியேற்றிவிட்டு அவர்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.