இதற்கு மேல் என்ன ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்? – முதல்வரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்.!

Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதுவரை ஸ்டாலின் எந்தஒரு ஆக்கபூர்வமான பரிந்துரையையும் கூறவில்லை என முதல்வர் கூறியமைக்கு மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது,செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ‘ நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஏதேனும் கருத்துக்களை கூறியுள்ளாரா? அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. என்னை பற்றியும் அரசை பற்றியும் குறை கூறுவதே ஸ்டாலினின் நோக்கம்.’ என மு.க.ஸ்டாலின் மீது தனது குற்றச்சாட்டை முதல்வர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘ ‘ மு.க.ஸ்டாலின் அரசியல் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறார் என்றும், இந்த அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக என்ன சொல்லியிருக்கிறார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுள்ளார்.

அவருக்கு இதற்கு மேல் என்ன ஆலோசனைகள் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆலோசனைகளை மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து சொல்லி வருகிறேன். இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். இவை அனைத்தும் மக்கள் மன்றத்தில் உள்ளது. அதனை மீண்டும் முழுமையாகப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் திறன் இருக்குமானால், புரிந்து செயல்படுத்துங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை நான் விடுத்த ஒரு சில ஆலோசனைகளைத் தவிர, பெரும்பாலான மற்றவற்றைக் கேட்காத நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?’ என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக்குத் தெரியும். முதல்வருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்.

தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுங்கள்.

தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.

மக்களைக் காக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும்.

பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடுங்கள்.

மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள்.

பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள்.

சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள்.

கேரளா எப்படி மீள்கிறது; தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்.

– இவை அனைத்தும் நான் ஏற்கனவே சொன்னவை.

மீண்டும் சொல்கிறேன்; மீண்டும் மீண்டும் சொல்வேன்; சொல்லிக் கொண்டே இருப்பேன்; மக்கள் காக்கப்படும்வரை!

என தனது முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்