“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!
அதானி விவகாரம் குறித்து விளக்கம் வேண்டும் என ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கு, அவருக்கு வேற வேலை இல்லை . தினமும் அறிக்கை விடுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சாரத்துறை எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். இந்த தகவல் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில், அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஏதேனும் போட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி இருந்தார். ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “ராமதாஸுக்கு வேற வேலை இல்லை. தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” எனக் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “பருவமழையை எதிர்கொள்ள மாநில அரசு தயார் நிலையில் உள்ளது. நாடளுமன்ற கூட்டத்தொடரில் எம்பிக்கள் என்ன பேச வேண்டும் என ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழில் நகர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.