திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்த அமைச்சர் உதயநிதி!
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றே பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெறும் நிலையில் அதில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சேலம் வந்தடைந்தார்.
சேலம் வந்த அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் மாநாட்டு திடலில் சுடரை உதயநிதியிடம் இருந்து முதல்வர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது டி.ஆர் பாலு, பொன்முடி, ஐ. பெரியசாமி, ஆர். ராசா உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் பலர் உடனிருந்தனர்.
நாளை காலை 10 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுக முன்னணித் தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் மாலையில் முதல்வர் சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டுப் பந்தலில் லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.