தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.! மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை.!
234 தொகுதி திமுக பார்வையாளர்களுடன் இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஆளும் திமுக கட்சி தற்போதே தங்கள் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 234 சட்டமன்ற தொகுதிக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்தனர்.
இந்த 234 தொகுதி பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இளைஞரணியை சேர்ந்த புதியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இவர்களுடன் இன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த தொகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசு நலத்திட்டங்களை மக்களிடம் தொகுதி பார்வையாளர்கள் கொண்டுசெல்ல வேண்டும், தொகுதி முகவர்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.