ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையையை மேம்படுத்தி தோழர் நல்லகண்ணு பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து வாங்க இங்கு வந்துள்ளேன். பொதுவுடைமை கட்சிக்கும் நூற்றாண்டு விழா, நல்லகண்ணு ஐயாவிற்கும் நூற்றாண்டு விழா. இதுபோல பெருமை யாருக்கும் அமையாது” என பேசினார். மேலும் நினைவு பரிசாக திருவள்ளுவர் சிலை ஒன்றை தோழர் நல்லகண்ணுவிற்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தற்போது வெளியான தமிழக அரசு குறிப்பின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு பிறந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் வசதி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு கட்டடம்” என பெயர் சூட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே 2022ஆம் ஆண்டு தமிழக அரசு தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.