கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.! 

TN Govt announced Relief fund for Wayanad Landslide

வயாநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த மீட்பு பணிகளில் மாநில அரசின் மீட்புப்படையினர் மட்டும்மல்லாது, தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக, நிலச்சரிவு உயிரிழப்புகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாயை கேரளாவுக்கு நிவாரணமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவினர் உடனடியாக அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்