தமிழ் தாத்தா பிறந்தநாள் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்’ – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாளான பிப்ரவரி 19ஆம் தேதி ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை 2ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று, மதுரை டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு திட்டத்திற்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களும், முதலமைச்சரும் பதில் அளித்து வருகின்றனர். அதன்படி, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பற்றி பேசியிருந்தார்.
அவர் கூறுகையில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் இயற்பெயர் வெங்கட்ராமன். பிறப்பால் அவர் ஒரு வைணவர். அவர் திருவாரூர் ஆதினத்திடம் தமிழ் கற்க சென்றபோது, தனது சமயம் சார்ந்த கல்வி கற்பிக்க மறுத்து விடுவார்களோ என்று கருதி தனது பெயரை சாமிநாதன் என்ற சைவ பெயராக மாற்றிக்கொண்டார். அப்போது சீவக சிந்தாமணியை எழுத்துப்பிழை இன்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் சமண சமயத்தாரிடம் சென்று தமிழை பிழையின்றி எழுத கற்றுக் கொண்டார். அப்போது சைவ மதத்தை பின்பற்றும் நீங்கள்சமண சமயத்தாரிடம் சென்று பயின்று வந்துள்ளீர்கள் என்று பலர் கடிந்து கொண்ட போது, ‘தனக்கு சமய முக்கியமல்ல, தமிழ் தான் முக்கியம்’ என்று கூறியவர் உ.வே.சாமிநாத ஐயர். அவரது பெயரில் அம்மா (ஜெயலலிதா) ஆட்சி காலத்தில் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, அவரது பிறந்தநாளை தமிழ் இலக்கிய நாளாக இந்த அரசு அறிவிக்குமா” என கே.பி.முனுசாமி கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆண்டுதோறும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். அவரது பூர்வீக வீடு பராமரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
அப்போது பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளான பிப்ரவரி 19ஆம் தேதியை ஆண்டுதோறும் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார்.