பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை
C.M. Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி.
தர்மபுரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன்படி தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள தடங்கம் ஊராட்சி பகுதியில் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, “சிலிண்டர் விலையை குறைத்ததிலேயே பிரதமர் மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் உள்ளார் என தெரிந்துவிட்டது, சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் ஏன் கூட்டணி அமைத்தார் என்பது ஒன்றும் தங்கமலை ரகசியம் அல்ல, இது குறித்த காரணம் மக்களுக்கும் பாமகவினருக்கும் நன்றாக தெரியும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி ராமதாஸுக்கு உத்தரவாதம் கொடுத்தாரா?” இந்தியா என்ற அழகிய நாட்டை பாசிச மதவெறி கொண்ட பாஜக அழிப்பதை தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டுள்ளன. அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு. கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கோபிநாத் அவர்கள், அவரே சொன்னது போல, 2001, 2006, 2011 ஆகிய மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டவர். அவரையும் உங்கள் நன்மைக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ”கை” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நடக்க இருப்பது, இந்திய வரலாற்றிலேயே மிகமிக முக்கியமான தேர்தல்! இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அளிக்கும் வாக்கு!
இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும் என்றால், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும் என்றால், எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும் என்றால், அரசியல்சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் இந்திய தேசியக் கொடி கம்பீரமாக டெல்லி செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால், முதலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என்றார்.