#BREAKING: தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்..!
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி நடந்தது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார்.
ஆனால், இந்தப் பதவியேற்பதற்கு முன் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும். அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று மாலை வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஸ்டாலினை சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்தனர். இந்நிலையில், ஆதரவு பெற்ற உறுப்பினர்களின் கடிதங்களுடன் சற்று நேரத்திற்கு முன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை ஸ்டாலின் கோரினார்.
மேலும், மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார். நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.