“2 ரெய்டுகளுக்கு அதிமுக அடமானம்” – அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது. 2 ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழகத்தையும் அடகு வைக்க துடிக்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை.
மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வை – இந்தித் திணிப்பை – மும்மொழிக் கொள்கையை – வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அ.தி.மு.க. – இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா?
மாநில உரிமை – மொழியுரிமை – தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை – தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.