சென்னை வந்தவருக்கு கொரோனா – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.!
பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவருடைய சளி மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஆய்வின் முடிவு வந்த பின்னர்தான் அந்த நபருக்கு புதிய வகையான தொற்று இருக்கிறதா? என்பது குறித்து தெரியவரும். லண்டனில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை. பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை வந்தவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். அப்போது, 10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1,088 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.