அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது, முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தலைமை நீதிபதி உரிய ஒப்புதல் வழங்கும் முன்பே தனி நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார் என பதிவாளர் அறிக்கையை குறிப்பிட்டு மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் முன்வைத்தார். தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கு ஒரு நடைமுறை உள்ளது, அதனை தனி நீதிபதி பின்பற்றவில்லை.
2 கோடி தொண்டர்கள் இருப்பதாக பொய் சொல்கிறார்- ஓபிஎஸ்..!
தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும் வரை ஏன் தனி நீதிபதியால் காத்திருக்க முடியவில்லை?. நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என்றால் குறிப்பிட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கிறது எனவும் வாதம் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்ற முடிவை ஐகோர்ட் தலைமை நீதிபதி எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு கூறியதாவது, வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க அனுப்புவதே சிறந்தது. முடித்து வைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து தனி நீதிபதி விசாரிக்கும் நிலையில், இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு நீதிபதி முன்பு பட்டியலிடலாம் என்று கூறினர். இதனால் வழக்கை யார் விசாரிப்பது என்பதில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.