நீட் தேர்வால் இன்னோர் உயிர் போய்விடக்கூடாது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் பொது நுழைவுத் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டியுள்ளது. இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் மாநிலத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனை பொருட்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
நீட் விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழகத்தில் போராட்டம் நடத்தின.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தற்போது திமுக சார்பில் கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் நோக்கத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரிடம் திமுகவினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கினார். தற்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கையெழுத்து வாங்கினார்.
அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலில் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு கேட்போம். அதனை தமிழகத்தில் இருந்து நீக்குவோம் அதன் பிறகு சனாதனம் பற்றி பேசுவோம் என கூறினார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட மாநில பட்டியலில் கல்வி துறை சார்பாக உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு வருடமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. 230 எம்எல்ஏக்கள் நீட் தேர்வு விலக்கிக்கு ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர். நீட் தேர்வு காரணமாக இன்னொரு உயிரிழப்பு தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அமைச்சர் உதயநிதி கூறினார்.
நீட் தேர்வு விளக்கு கையெழுத்துப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும் என்று நீட் தேர்வு விலக்கு கையெழுத்து போராட்டத்தில் பங்கு பெற்ற பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.