“அப்படியா., தெரியலையே..” துணை முதல்வர் கேள்விக்கு உதயநிதியின் ‘நச்’ பதில்.!
நான் அண்ணா அறிவாலயம் போகவில்லை. அதனால், அங்கு என்ன ஆலோசனை நடக்கிறது என்பது தெரியவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர்.
சென்னை : இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மூத்த அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா என மூத்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் எந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும், அமைச்சரவை மாற்றம் குறித்தும், குறிப்பாக திமுகவினர் மத்தியில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிப்பது தொடர்பாக இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகின்றன.
இப்படியான சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் துணை முதலமைச்சர் குறித்த ஆலோசனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, “அப்படியா எனக்கு தெரியவில்லையே. நான் அண்ணா நூற்றான்டு மாளிகையில் இருந்தேன். அறிவாலயம் போகவில்லை.
துணை முதலமைச்சர் பதவி குறித்து தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை கூறிவருகிறார்கள். நேற்று பழனிமாணிக்கம் அவர்கள் திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்து பேசியிருந்தார். நான் சொல்வது ஒன்றுதான். எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். இது முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு. துணை முதல்வர் பற்றி அறிவிப்பு வந்தால் அதுபற்றி பேசுவோம். ” எனத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.