நீட் விலக்கு : காங்கிரஸ் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த நீட் தேர்வு தோல்வியால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆதலால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை கொண்டு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அதில் ஒரு மசோதா திரும்ப பெறப்பட்டு, மற்றொரு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல, நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக திமுகவினர் 50 லட்சம் கையெழுத்து பெரும் போராட்ட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த கையெழுத்து போராட்டத்தில் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொள்ள திமுக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கட்சியினர் மட்டுமின்றி , மாணவர்கள், பொதுமக்கள் என பலரிடமும் திமுகவினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
நீட் விலக்கு கையெழுத்து போராட்டத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று இருந்தார்.
அங்கு, நீட் விலக்குக்கு எதிராக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன் எனவும் தெரிவித்தார்.