முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி.!
முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று சிவகங்கையில் தொடங்கியது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை : ஆண்டுதோறும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இந்தாண்டு, இம்மாதம் (செப்டம்பர்) மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ளது. 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத்தொகை கொண்ட இந்த விளையாட்டு போட்டிகளில் பல்வேறு வயது பிரிவினருக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று சிவகங்கையில் தொடங்கின. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று முதல் 10 நாட்கள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.
சிவகங்கையில் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 50 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். 10 நாட்கள் விளையாட்டு போட்டிகள் முடிந்து இதில் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்து சென்னையில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர். கபாடி, கைப்பந்து, கூடை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள், தடகள போட்டிகள் காலை, மாலை என 2 இருவேளைகளில் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
முதலமைச்சர் கோப்பையானது 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப் பிரிவினர் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என பலரும் தனி நபர் முதல் குழு போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
முதலமைச்சர் கோப்பைகனா மொத்த பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். தனி நபர் போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம் ஆகும். அணிகள் வாயிலாக முதல் பரிசு ரூ. 75 ஆயிரம் ஆகும்.