9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி பதிலடி.!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பெருதளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதே போல வட மாவட்டங்களிலும் மிஃஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.
இந்த கனமழை வெள்ளம் குறித்தும், அதற்கான மீட்பு பணிகள் குறித்தும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த நிவாரண பணிகள் குறித்தும் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, இதனை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என தெரிவித்தார். இதுவரை மழை பாதிப்பை பேரிடராக அறிவித்தது இல்லை. அதனால் இந்த மழை பாதிப்புகளையும் பேரிடராக அறிவிக்க இயலாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தையும் நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார்.
தூத்துக்குடி கனமழை : பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் துவக்கம்.!
முன்னதாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக அரசு, மத்திய அமைச்சரின் அப்பாவின் சொத்துக்களை கேட்கவில்லை. நாங்கள் செலுத்திய வரி பணத்தை தான் கேட்கிறோம் என விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி விளக்கமும் கொடுத்து இருந்தார். அமைச்சர் உதயநிதி கருத்துக்கும் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்களுக்கு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நான் யாரையும் தவறாக பேசவில்லை என கூறினார். மேலும், கடந்த 9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான். அதனால் இந்த மழையை தனியே ஒரு பேரிடராக அறிவிக்க வேண்டியதில்லை என இணையத்தில் பார்த்ததாக மத்திய அமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தின் போது இந்தியா (I.N.D.I.A) கூட்டணி வேலைகளையும் பார்க்க வேண்டி உள்ளது. அதனால், அதனை பார்த்துவிட்டு பிரதமரையும் சந்தித்து விட்டு வந்துள்ளார். அடுத்த நாளே தூத்துக்குடி திருநெல்வேலியில் ஒரு நாள் முழுக்க வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். நானும் நாளை அல்லது நாளை மறுநாள் தூத்துக்குடிக்கு செல்ல உள்ளேன். இந்த வெள்ள பாதிப்பில் எனது தவறு, உனது தவறு என அரசியல் செய்ய விரும்பவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.