“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!
விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பெரிதாக்க வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த அமைதி பேரணிக்கு காவல்துறை தரப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி அனுமதி கொடுக்க மறுக்கப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இருந்தாலும், தடைகள் மீறி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது.
இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில், சீமான், அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலை, ஓபிஎஸ் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். அப்பொழுது, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “வாழும் மனிதநேயமாக கருதப்படும் ஒரு கலைஞர் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, முத்தமிழறிஞர் கலைஞருக்கு விழா எடுத்து, தங்கப் பேனாவை வழங்கி சரித்திரம் படைத்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் இறந்தபோது, அவர் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் காணொளி வாயிலாக வடித்த கண்ணீரை, திமுக எப்போதும் மறக்காது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் நேராக சென்ற இடம் கலைஞரின் நினைவிடம்தான்.
போக்குவரத்து காரணங்களால் தேமுதிக அமைதி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால்,பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம். தமிழக அரசு சார்பில் விஜயகாந்திற்கு நான் அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.