யார் இந்த ஆதவ் அர்ஜுனா? யாரென்றே தெரியாது – அமைச்சர் சேகர்பாபு.!
ஆதவ் அர்ஜூனா என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
சென்னை: நேற்றைய தினம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா,” தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆதவ் அர்ஜூனா யாரென்றே தெரியாத போது, அதுபற்றி கருத்து கூற முடியாது என்றார். தெரிந்த நபர்களை பற்றி தன்னிடம் கேள்வி கேளுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது ஒரு பக்கம் இருக்க, அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் விசிக ஆதவ் அர்ஜுனா குறித்த வீடியோ ஒளிபரப்பானது. அதில், திமுக வெற்றி பெற மிக முக்கிய பங்காற்றியது ஆதவ் அர்ஜூனா, திமுகவிற்கு வேலைசெய்ய பிராசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே ஆதவ் அர்ஜூனாதான், பின்னர் விசிகவுடன் கைகோர்த்து செயல்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில், ‘ஆதவ் அர்ஜூனா என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை’ என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தது விவாதத்தை எழுப்பியுள்ளது.