அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை..!
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியை தொடர்ந்து, நேற்று புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, 2வது நாளாக இன்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை 9 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை நடைபெறுவதால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் உள்ளனர். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக இஎஸ்ஐ மருத்துவர்கள் இரண்டு பேர் உள்ளனர்.